திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் டிராக்டர் ஊர்வலம்
திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் டிராக்டர் ஊர்வலம் நடத்தினர்.
திண்டுக்கல்லில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் குமரன் பூங்கா அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். குமரன் பூங்கா முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பெரியார் சிலை முன்பு நிறைவடைந்தது.
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி. பெருமாள், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.