சேலத்தில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமல் விற்பனை:ரூ.4 லட்சம் மதிப்பிலான பொம்மைகள், எலக்ட்ரிக் கார்கள் பறிமுதல்


சேலத்தில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமல் விற்பனை:ரூ.4 லட்சம் மதிப்பிலான பொம்மைகள், எலக்ட்ரிக் கார்கள் பறிமுதல்
x

சேலத்தில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான சிறுவர், சிறுமிகளின் விளையாட்டு பொருட்களான எலக்ட்ரிக் கார்கள், பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம்

கடைகளில் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் இந்திய தர நிர்ணய அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டு ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமல் விற்பனை செய்யும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி, கோவை இந்திய தர நிர்ணய அமைப்பின் தலைமை அதிகாரி கோபிநாத் உத்தரவின்பேரில் இணை இயக்குனர் நாகவள்ளி, உதவி இயக்குனர் கவின் தலைமையிலான குழுவினர் சேலம் அம்மாப்பேட்டை பகுதிகளில் உள்ள பல்வேறு எலக்ட்ரானிக் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

எலக்ட்ரிக் கார்கள் பறிமுதல்

இதில், அம்மாப்பேட்டையில் உள்ள எலக்ட்ரானிக் பொம்மைகள் விற்பனை கடையில் சோதனை செய்தபோது, அங்கு பேட்டரி மூலம் இயக்கப்படும் சிறுவர், சிறுமிகளுக்கான எலக்ட்ரிக் கார்கள், பைக் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களில் இந்திய தர நிர்ணய அமைப்பின் (ஐ.எஸ்.ஐ.) தர முத்திரை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த கடையில் இருந்த ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத ரூ.4 லட்சம் மதிப்பிலான 28 எலக்ட்ரிக் கார்கள் உள்பட குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த கடையின் உரிமையாளர் மீது இந்திய தர நிர்ணய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து குக்கர், கியாஸ் அடுப்பு, சிமெண்டு, கட்டுமான கம்பிகள், மின் கேபிள்கள், எலக்ட்ரிக் பொம்மைகள் போன்ற நுகர்பொருள் தயாரிப்பில் இந்திய தர நிர்ணய அமைப்பின் (ஐ.எஸ்.ஐ.) முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும். இந்த முத்திரை இல்லாவிட்டால் நுகர்வோர் அந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்த விவரங்களை இந்திய தர நிர்ணய அமைப்பின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story