குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் சீசன்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் குளிர்ந்த காற்று வீசும். சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் தண்ணீர் கொட்டும்.

இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து குளித்துவிட்டு செல்வார்கள். இந்த ஆண்டுக்கான சீசன் ஆகஸ்டு மாதம் முடிவடைந்து விட்டது. எனினும் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இடையிடையே மழை பெய்து வருகிறது.

இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது. குறைவான அளவில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


Next Story