வைகை அணையை பார்வையிட குவிந்த சுற்றுலா பயணிகள்
கடல் போல் காட்சி அளிக்கும் வைகை அணையை பார்வையிட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வைகை அணை
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக இருந்தது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,040 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,761 கன அடி உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
அணையின் அனைத்து மதகுகளின் வழியாகவும் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதேபோல் அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை பார்வையிட விடுமுறை தினமான ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதேபோல் அணை பகுதியில் உள்ள பூங்காவை பார்த்து ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் வாகன நிறுத்துமிடம் நிரம்பியதால், சாலையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்
அணையின் பக்கவாட்டு பகுதியில் உள்ள பூங்காவின் நுழைவுப் பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரூ.15 வீதம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் நுழைவு கட்டணத்துக்கு உரிய ரசீது பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்படவில்லை.
இதனால் நுழைவு கட்டணம் வசூலித்த பணியாளர்களிடம் ரசீது கொடுக்குமாறு கேட்டு சுற்றுலா பயணிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அணையில் தடை செய்யப்பட்ட பகுதிகள் என்று இரும்பு கேட் போட்டு பூட்டப்பட்ட மதகுகளின் மேல் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து சுற்றுலா பயணிகளிடம் கேட்டபோது, "சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.5 என்று அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ரூ.15 வீதம் வசூலிக்கப்படுகிறது. அதற்கான ரசீதும் கொடுக்கப்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணக்கிட்டும், அங்கு வழங்கப்பட்ட நுழைவு கட்டண ரசீதுகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்" என்றனர்.