மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்
காலாண்டு விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, மீண்டும் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் நேற்று தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
கடற்கரை கோவில், ஐந்தரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கிருஷ்ண மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பலர் புராதன சின்னங்கள் முன்பு குடும்பம், குடும்பமாக நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கடலில் குளித்து மகிழ்ந்தனர்
பெற்றோர் பலர் இன்று பள்ளிகள் திறக்க உள்ளதால் காலாண்டு தேர்வு எழுதிய தங்கள் பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக அவர்கள் கேட்ட பரிசு பொருட்களையும், தின்பண்டங்களையும் வாங்கி கொடுத்ததை காண முடிந்தது. அதேபோல் மாமல்லபுரம் கடற்கரையிலும் சாரல் மழையால் இதமான சூழல், ரம்மியமான காற்று வீசியதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் நேற்று திரண்டு வந்து பொழுதை கழித்தனர்.
கடல் சீற்றம் அதிகமிருந்த போதிலும் அதை பற்றி யாரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. அவர்களை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் கடற்கரையில் ரோந்து வந்த போலீசார் குழந்தைகளுடன் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜவீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, மேற்கு ராஜவீதி போன்ற முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையால் கடற்கரை சாலை, அர்ச்சுனன் தபசு வளாக பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டி இருந்ததை காண முடிந்தது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வழிகாட்டிகள் அனைவருக்கும் பயணிகள் மூலம் சுற்றி காட்டும் பணிகள் கிடைத்ததால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு போதிய வருவாய் கிடைத்ததால் நேற்று மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.