சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து மாமல்லபுரம் சப்த கன்னியர் சிலைகள் புராதன இடத்தை பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள்
சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து மாமல்லபுரம் சப்த கன்னியர் சிலைகள் புராதன இடத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்கு வடித்த குடைவரை கோவில்கள், குடைவரை மண்டபங்கள், ரதங்கள், பாறை சிற்பங்கள் உள்ளிட்ட புராதன சின்னங்களை கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர். இந்த கற்சிற்ப புராதன சின்னங்களை பார்வையிடுவதற்காக மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான, உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வந்து செல்வதை தினமும் நாம் காணலாம்.
குறிப்பாக மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை தொல்லியல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறது.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்திலேயே சப்த கன்னியர் வழிபாடு நடந்துள்ளதாகவும், இதற்காக பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமூண்டீஸ்வரி போன்ற சப்த கன்னியர்களுக்கு (7 கன்னிகள்) பல்லவர்கள் சிலைகள் அமைத்து வழிபட்டுள்ளனர்.
குறிப்பாக மாமல்லபுரத்தில் பொதுமக்கள் குடியிருப்பு வளாக பகுதியில் உள்ள சப்த கன்னியர் புராதன சின்ன பகுதியில் சமூக விரோதிகள் சிலர் அங்குள்ள கம்பி வேலியை தாண்டி உள்ளே சென்று மது குடிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் இதுவரை அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
தற்போது மாமல்லபுரத்திற்கு குழு, குழுவாக சுற்றுலா வரும் பொதுமக்களிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்த கன்னியர் 7 பேரின் சிலைகள் உள்ள இந்த புராதன சின்னத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து தற்போது மாமல்லபுரம் தொல்லியல் துறையின் சிறப்பு அனுமதி பெற்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் சப்த கன்னியர் புராதன சின்னத்தை ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்வதை காண முடிகிறது.
குறிப்பாக இந்த சப்த கன்னியர் புராதன பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறும்போது:-
சப்த மாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் சிலைகளை, அதுவும் பல்லவர் கால வழிபாட்டின் பழைய சிலைகளை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை தாங்கள் 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு சப்த கன்னியர் பூஜை செய்வதைதான் பார்த்திருக்கிறோம்.
தற்போது நேரில் 7 தெய்வங்களின் சிலைகளை பார்த்து வழிபட்டு செல்வது மனநிறைவாக உள்ளது. இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். இதனால் மாமல்லபுரத்தில் மற்ற புராதன சின்னங்களுக்கு வருவதுபோல் இங்கும் தற்போது சுற்றுலா பயணிகள் குவிவதை காண முடிகிறது.