சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கொடைக்கானல்
சிலிர்க்க வைக்கும் குளிர், மிதமான வெப்பநிலை என இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவுவதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டி வருகிறது.
சிலிர்க்க வைக்கும் குளிர், மிதமான வெப்பநிலை என இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவுவதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டி வருகிறது.
சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக கொடைக்கானலில் பரவலாக மழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் மழையால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யவில்லை. ஆனால் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இதன் காரணமாக பகல் வேளையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
களை கட்டிய கொடைக்கானல்
உடலை சிலிர்க்க வைக்கும் குளிர், அதனை விரட்டியடிக்கும் வகையில் மிதமான வெப்பநிலை என இதயத்தை வருடும் இதமான சூழல் கொடைக்கானலில் தற்போது நிலவுகிறது. இதனால் சீசன் காலத்தை போல, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மீண்டும் களை கட்ட தொடங்கி விட்டது.
வார விடுமுறை தினம் என்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கினர். இதனால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஆக்கிரமித்த பனிமூட்டம்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலை அதிகாலையிலேயே அடர்ந்த பனிமூட்டம் ஆக்கிரமித்து கொண்டது. பகல் வேளையிலும் பகலவனின் முகத்தை பார்க்க முடியவில்லை. காலை 11 மணி வரை பனியின் வலையில் கொடைக்கானல் சிக்கி கொண்டது என்றே சொல்லலாம்.
அதன்பிறகு மதியம் 3 மணி வரை மிதமான வெப்பநிலை நிலவியது. பின்னர் மாலையில் மீண்டும் பனிப்பொழிவு கொடைக்கானலை தன்வசப்படுத்தி கொண்டது. பனியும், மிதமான வெப்பமும் நிலவியதால் ஏற்பட்ட சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து உற்சாகம் அடைந்தனர்.
ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்
இதேபோல் கொடைக்கானல் மோயர் சதுக்கம், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, இயற்கை அழகை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மேலும் அப்பகுதிகளில் புகைப்படம், செல்பி எடுத்தனர்.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் ஆனந்தம் அடைந்தனர். வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரை பார்த்து ரசித்தனர்.
2 வாரங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று கொடைக்கானலில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.