திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்தடை நீக்கப்பட்டதால் உற்சாக குளியல்


திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்தடை நீக்கப்பட்டதால் உற்சாக குளியல்
x

ஒருவாரத்துக்கு பின் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க குவிந்ததால் திற்பரப்பு அருவி மீண்டும் ‘களை’ கட்டியது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

ஒருவாரத்துக்கு பின் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க குவிந்ததால் திற்பரப்பு அருவி மீண்டும் 'களை' கட்டியது.

குளிக்க தடை

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மலையோர பகுதிகளில் பெய்த மழையால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து 4500 கன அடி உபரிநீர் வெளிேயற்றப்பட்டது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் கோதையாற்று தண்ணீரும் சேர்ந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 17-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமுடன் திரும்பிச் சென்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

இந்தநிலையில் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததைதொடர்ந்து, ஒரு வாரத்துக்கு பின் நேற்று முன்தினம் தீபாவளியன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தீபாவளி விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அருவியின் அனைத்து பகுதிகளிலும் பாறைகள் தெரியாத வகையில் தண்ணீர் பாய்கிறது. எனவே தண்ணீர் அதிகமாக விழும் அருவியின் இருபகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பிற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

மீண்டும் 'களை' கட்டியது

இந்தநிலையில் நேற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை விடுப்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அருவிக்கு வந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோல், அருவியின் மேல்பகுதியில் உள்ள தடுப்பணையிலும் அவர்கள் படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

ஒருவாரத்துக்கு பின் அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகையால் திற்பரப்பு அருவி மீண்டும் 'களை' கட்டியது.


Next Story