குற்றாலம் ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய 2 மாதங்கள் மட்டுமே சீசன் இருந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து குற்றால சீசனை அனுபவித்து சென்றனர். சீசன் முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் சாரல் மழையினால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது. தற்போது அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது. மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் மிகவும் குறைவாக விழுகிறது. ஐந்தருவியில் 4 கிளைகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது. மற்ற அருவிகளை விட ஐந்தருவியில் சற்று அதிகமாக விழுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.