ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்;குரங்கு நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்
ஆழியாறில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்பட்டனர். அவர்கள் குரங்கு நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
பொள்ளாச்சி: ஆழியாறில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்பட்டனர். அவர்கள் குரங்கு நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி அருகே மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களாக ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சி, ஆழியாறு பூங்கா மற்றும் வால்பாறை ஆகியவை உள்ளன. இங்கு சீசன் காலங்களில் தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதன்படி தற்போது காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது ஆழியாறு, வால்பாறை பகுதியில் அவ்வப்போது லேசான மழை மற்றும் மேகமூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. இந்த இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்றும் ஆழியாறில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் காணப்பட்டனர். அவர்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்து உற்சாகமடைந்தனர். மேலும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சென்று அங்கு ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக நேற்று குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளித்து மகிழ்ந்ததை பார்க்க முடிந்தது.
போக்குவரத்து நெரிசல்
இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி முதல் ஆழியாறு சிறுவர் பூங்கா வரை 2 கி.மீ. தூரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து வரிசையில் நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் போதுமான அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் தாறுமாறாகவும், சாலையின் குறுக்கேயும் தங்கள் வாகனங்களை நிறுத்தி எடுத்து சென்றதால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார், வனத்துறையினர் வாகன போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதில் சிரமப்பட்டனர். மேலும் விடுமுறை தினங்களில் குவியும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் போதுமான போலீசார், வனத்துறையினரை ஈடுபடுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வால்பாறை
வால்பாறை பகுதியில் நேற்று விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இருந்தாலும் மழையிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வால்பாறைக்கு வந்தனர். அவர்கள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அதேநேரத்தில் குளித்து விட்டு உடை மாற்றிக் கொள்ளவும், கழிப்பிட வசதியும் அங்கு இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறை நகரில் உள்ள ஒரே ஒரு மெயின் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.