ஈஸ்டர் பண்டிகை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஈஸ்டர் பண்டிகை விடுமுறை நாளில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு உற்சாகமாக குளித்து குதூகலம் அடைந்தனர்.
திருவட்டார்:
ஈஸ்டர் பண்டிகை விடுமுறை நாளில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு உற்சாகமாக குளித்து குதூகலம் அடைந்தனர்.
திற்பரப்பு அருவி
குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டுகிறது. மேலும் அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்தபடி குளுகுளு சீசன் அங்கு நிலவுகிறது.
இதற்கிடையே ஈஸ்டர் பண்டிகை விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவி நோக்கி படையெடுத்தனர்.
அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து குதூகலம் அடைந்தனர். பின்னர் திற்பரப்பு தடுப்பு அணைக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு சவாரியின் போது இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக வெயில் காலங்களுக்கு ஏற்ற நுங்கு மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யும் தற்காலிக கடைகளும் திற்பரப்பில் ஆங்காங்கே முளைத்துள்ளன. இதனால் அங்கு வியாபாரம் களை கட்டியது.
மாத்தூர் தொட்டிப்பாலம்
இதேபோல் கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, முட்டம், லெமூர் கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, இரணியல் அரண்மனை உள்ளிட்ட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது. மாத்தூர் தொட்டி ப்பாலத்திலும் நடந்து சென்று சுற்றுலா பயணிகள் இயற்கையின் ரம்மியத்தை ரசித்தனர். சிலர் பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் சுற்றுலாதலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.