கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குளு, குளு சீசன் நிறைவடையும் நிலையில் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
குளு, குளு சீசன்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் பகுதியில் தற்போது குளு, குளு சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது. தரைப்பகுதியில் அதிக வெப்பம் நிலவுவதால், கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
கொடைக்கானல் நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பலமணி நேரம் காத்திருப்பு
சீசனை முன்னிட்டு கூடுதலாக நியமிக்கப்பட்டிருந்த போலீசார் பணி முடிந்து திரும்பி விட்டனர். போதிய போலீசார் இல்லாததால் வெள்ளி நீர்வீழ்ச்சி, டைகர்சோலை உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலையும் கடந்து வந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர். குறிப்பாக பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயர்பாயிண்ட், குணாகுகை, பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். மேலும் அங்கு புகைப்படம்,செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
செயற்கை நீரூற்றுகள்
கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர். ஏரியில் எழில் கொஞ்சும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகளில் பொங்கி வழியும் தண்ணீர் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்து வருகிறது. மேலும் ஏரியை சுற்றிலும் சுற்றுலா பயணிகள் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தனர்.
இதேபோல் ரோஜாப்பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல்வேறு வண்ண ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள லட்சக்கணக்கான பூக்களையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
இதற்கிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், பகலில் சுமார் 15 நிமிடம் சாரல் மழை பெய்தது. அதன்பிறகு இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
--------