கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:30 AM IST (Updated: 1 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசியான' கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. கொடைக்கானலின் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிவார்கள்.

அதன்படி புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக நேற்று அதிகாலையில் இருந்தே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் கார்கள், சுற்றுலா வாகனங்களில் வரத்தொடங்கினர். சிலர் மலைப்பாதை பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களில் கொடைக்கானலுக்கு நேற்று வந்தனர்.

வாகன போக்குவரத்துக்கு தடை

இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேரம் செல்லச்செல்ல அதிக அளவில் வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க நேற்று இரவு 7 மணி முதல் ஏரிச்சாலையில் வாகன போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.

பகலில் கொடைக்கானலின் குளுமையான காலநிலையை அனுபவித்தபடியே நகரில் உள்ள பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, குணா குகை, பில்லர் ராக்ஸ், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரில் உள்ள ஓட்டல்கள், சாலையோர கடைகளில் அமர்ந்து சாப்பிட முடியாத அளவுக்கு கூட்டம இருந்தது.

புத்தாண்டு வாழ்த்து

மேலும் புத்தாண்டையொட்டி நகரில் உள்ள ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்துகொள்வதற்காக சுற்றுலா பயணிகள் மாலையில் இருந்தே ஓட்டல்களை நோக்கி படையெடுத்து வந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதேபோல் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு பிரார்த்தனைக்காக ஏராளமானோர் குவிந்தனர்.

பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் இரவு 7 மணி முதலே ஏரிச்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால் நள்ளிரவில் வாகன சாகசத்தில் ஈடுபடுவதற்காக ஏரிச்சாலைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ரோந்து பணி

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை பலமடங்கு அதிகரித்ததால் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர். அவர்கள் நகர் பகுதியில் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டதுடன் போக்குவரத்தை சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டனர்.


Next Story