கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி

தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா தலம்

உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள்.

இந்தநிலையில் மிலாதுநபி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை ,பள்ளிக்கு காலாண்டு விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரிய உதய காட்சியை காண திரண்டனர். மழை, மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஏமாற்றம்

அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

இந்நிலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால் வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 10 மணிக்கு கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து படகு போக்குவரத்து 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு தொடங்கியது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் பொறுமையுடன் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.

நிரம்பி வழிந்த கூட்டம்

மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதற்கிடையே வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு நேற்று இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story