ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புத்தாண்டை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஏலகிரிமலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இயற்கை பூங்கா, படகு இல்லம், சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை உள்ளிட்டவை மலையேறும் தொடக்கப் பகுதியில் உள்ளன. மேலும் மலையோர பகுதிகளில் சாகச விளையாட்டுகளும், மங்களம் சுவாமி மலை ஏற்றம், கதவநாச்சி அம்மன் கோவில், பண்டோரா பார்க், பறவைகள் சரணாலயம் ஆகியவை மலையோர பகுதிகளில் அமைந்துள்ளன. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி நிலாவூர் பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
நேற்று புத்தாண்டு தினம் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையால் ஏலகிரி மலையில் குழந்தைகளுடன் சுற்றுலாப் பயணிகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிகளவில் குவிந்தனர். இதனால் ஏலகிரி மலையில் அனைத்து தனியார் விடுதிகளும் நிரம்பியது.
சுற்றுலா பயணிகள் பூங்காக்கள், நீர்வீழ்ச்சி, மூலிகை பண்ணை உள்ளிட்டவைகளை சுற்றிப்பார்த்தனர்.மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தங்குவதற்கு விடுதிகளில் இடம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் சில விடுதியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏலகிரி மலையில் தங்கும் விடுதியில் கட்டணம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதியில் கூடுதல் அறைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.