ராமேசுவரம், தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ராமேசுவரம், தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

காலாண்டு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரத்துக்கு கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை என்பதால் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராட நீண்டவரிசையில் பக்தர்கள் காத்து நின்று புனித நீராடினர்.

மேலும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கும் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து மூன்றாம் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் முதல் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

போக்குவரத்து நெருக்கடி

அமாவாசை நாட்களை போல் ராமேசுவரம் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்ததால் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வாசல் வரையிலும் அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடியே சென்றன. மேலும், ராமேசுவரம் திட்டக்குடி சாலை, தனுஷ்கோடி செல்லும் சாலை, ராமதீர்த்தம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

விடுமுறை நாட்கள் என்றாலே ராமேசுவரம் நகரில் போக்குவரத்து நெருக்கடி என்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும், ராமேசுவரம் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தனுஷ்கோடி

இதற்கு தீர்வு காணும் வகையில் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களையும் ஒரு வழியாக சென்று மற்றொரு பாதை வழியாக திருப்பி செல்லும் வகையில் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை அகலப்படுத்தவோ அல்லது நகருக்குள் வாகனங்கள் செல்ல வசதியாக மேம்பாலங்கள் கட்டவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேற்று விடுமுறையையொட்டி ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகள் பலரும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் குவிந்தனர். இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.


Next Story