தொடர் விடுமுறை எதிரொலி; கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை எதிரொலி; கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
x

தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

திண்டுக்கல்

தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகனூர் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், அந்தந்த பகுதிகளுக்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். அதன்பிறகு வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்றன.

படகு சவாரி

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, தேவதை அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பில்லர் ராக், மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல் அருகே மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்குள்ள எழும்பள்ளம் ஏரி நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன், புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story