சூரிய உதயத்தை காண குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


சூரிய உதயத்தை காண குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் செல்வதற்காக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

சூரிய உதயத்தை காண குமரிக்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.

அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் சனி,ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவதால் அங்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story