ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
வார விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
மேலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அதன்படி நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு
இந்த நிலையில் நேற்று விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை அவர்கள் கண்டு ரசித்தனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்காவல் படையினர் காவிரி கரை மற்றும் அருவி பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.