அன்னூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம்...!


அன்னூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம்...!
x

அன்னூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்


நெல்லை மாவட்டம் களக்காடு அருகே தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது32). இவர் மதுரை மாநகர் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி புனிதா (31). இவரும் மதுரையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியின் சகோதரி மற்றும் நெருங்கிய உறவினர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு 11 மணிக்கு நெல்லையில் இருந்து வேனில் உதகைக்கு புறப்பட்டனர். வேனில் 15 பேர் பயணம் செய்தனர்.

இவர்களது உறவினரான டேனியல் ராஜரத்தினம் (21) என்பவர் வாகனத்தை ஓட்டியுள்ளார். கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி வழியாக, உதகை செல்லும் போது அன்னூரை அடுத்துள்ள காளியாபுரம் என்னும் இடத்தின் அருகே வேன் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பள்ளி மாணவி ரனிஷா (14), ரஞ்சிதம் (75), தீனா மெர்வின் (15), செல்வகனி (39), எஸ்தர் ராணி (30), மணிஷா (10), வேதிகா (6), ரதீஷா (17),நேத்ரா (12) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ரனிஷாவின் தலையில் பலத்த காயமும், ரஞ்சிதம் என்ற மூதாட்டிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்கு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story