நோயாளிகளுக்கு சூடு வைத்து சித்ரவதை போதை மறுவாழ்வு மையத்துக்கு 'சீல்' - உரிமையாளர் கைது


நோயாளிகளுக்கு சூடு வைத்து சித்ரவதை போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல் - உரிமையாளர் கைது
x

போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகள் ‘சூடு’ வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர். அதிகாரிகள் ஆய்வு செய்து போதை மறுவாழ்வு மையத்தை சீல் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்தனர்.

திருவள்ளூர்

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் சீமான் தமிழ்வேந்தன். இவர் புழல் கதிர்வேடு பகுதியில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இங்கு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். மணலியை சேர்ந்த மதன்(வயது 38), எம்.கே.பி. நகரை சேர்ந்த சிவகுமார் (50) ஆகியோரும் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்கள் 2 பேர் உள்பட போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் கை, கால்களில் சூடு வைத்தும், அடித்தும் சித்ரவதை செய்ததாக சம்பந்தப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இருந்து மனநல காப்பகத்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நேற்று மனநல காப்பகத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மணிவாசகம் ஆகியோர் புழல் போலீஸ் பாதுகாப்புடன் போதை மறுவாழ்வு மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதில் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவது உறுதியானது.

இதையடுத்து அந்த போதை மறுவாழ்வு மையத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த 34 பேரை மீட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் சீமான் தமிழ்வேந்தனை புழல் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story