நாளை மறுநாள் டெல்லி வரவேண்டும் - தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு
மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை எதிர்க்கட்சியினர் வகுத்து வருகின்றனர்.
சென்னை,
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணியின் 3 கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை எதிர்க்கட்சியினர் வகுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களை அக்கட்சியின் மேலிடம் வரும் 29-ம் தேதியன்று டெல்லிக்கு அழைத்துள்ளது. இந்த அழைப்பில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லகுமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 29 மற்றும் 30 -ம் தேதிகளிலில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கூட்டணி நிலவரம், தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.