திருப்பூரில் தக்காளி விலை வீழ்ச்சி
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை கிடு, கிடு என குறைந்துள்ளது. நேற்று 15 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை கிடு, கிடு என குறைந்துள்ளது. நேற்று 15 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி வரத்து அதிகரிப்பு
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடந்து வருகிறது. இதில் மொத்த விற்பனை மார்க்கெட்டிற்கு பல்லடம், பொங்கலூர், கொடுவாய், தாராபுரம், உடுமலை மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தக்காளி பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதில் குறிப்பாக கடந்த சில வாரங்களாக தக்காளியின் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அதன் விலை கிடு,கிடுவென குறைந்து வருகிறது. கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி மொத்த விற்பனை விலையாக ரூ.150 முதல் ரூ.250 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் ரக தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை சரிவு
இந்த நிலையில் நேற்று மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்தது. இதனால் 15 கிலோ எடைகொண்ட தக்காளி பெட்டி முதல் ரக தக்காளி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் ரக தக்காளி குறைந்தபட்ச விலையாக ரூ.100 முதல் ரூ.80 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக ரூ.250 முதல் ரூ.350 வரைக்கும் விற்பனையாக வேண்டிய தக்காளி தற்போது பெருமளவு விலை குறைந்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் வழக்கத்தைவிட அதிகளவில் தக்காளியை வாங்கிச்சென்றனர். தக்காளியின் மொத்த விலை மேற்கண்டவாறு இருந்த நிலையில் கடைகளில் சில்லரை விலை இதை விட அதிகமாக இருந்தது.