நெல்லையில் தக்காளி கிலோ ரூ.200க்கு விற்பனை..!
நெல்லை, பாளையங்கோட்டை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை,
வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மானூர், அழகியபாண்டியபுரம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், கொத்தமல்லி இலை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைந்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும்.
ஆனால் மழை இல்லாததால் போதிய விளைச்சல் இல்லாமல் காய்கறிகளின் வரத்து குறைந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சில காய்கறிகளின் விலை ரூ.100 முதல் ரூ.180 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் அவற்றின் விலை உயர தொடங்கி உள்ளது. நேற்று பாளையங்கோட்டை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை சற்று குறைந்ததால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.