செடிகளிலேயே பறிக்காமல் விடப்படும் தக்காளிகள்
வடமதுரையில் உரிய விலை கிடைக்காததால் செடிகளிலேயே பறிக்காமல் தக்காளிகள் விடப்பட்டுள்ளன.
வடமதுரை, அய்யலூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தங்களது தோட்டத்தில் விளையும் தக்காளிகளை, அய்யலூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து தக்காளிகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட நாட்டு தக்காளி ரூ.80 வரையிலும், உயர்ரக தக்காளி ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தக்காளி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு வளர்த்து, கூலி ஆட்களை கொண்டு பறித்து, வாகனங்களில் ஏற்றி சந்தைக்கு கொண்டு சென்றால் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே தக்காளிகளை பறிக்காமல், செடிகளிலேயே விடும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அய்யலூரில், தக்காளி பதப்படுத்தப்படும் உணவு பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காலத்தில், அங்கு பதப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் உணவு பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்கா பணியை விரைந்து முடித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.