ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி; கிலோ ரூ.25-க்கு விற்பனை


ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி; கிலோ ரூ.25-க்கு விற்பனை
x

ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை ஆனது. இதேபோல் மீன்கள் விலையும் குறைந்துள்ளது.

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை ஆனது. இதேபோல் மீன்கள் விலையும் குறைந்துள்ளது.

தக்காளி விலை வீழ்ச்சி

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டிற்கு, ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி வருகிறது. தினந்தோறும் 10 முதல் 12 டன் வரை தக்காளி வந்தது. கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வந்தது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் தக்காளி வந்ததால், விலை வீழ்ச்சியடைந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆனது.

மீன்கள் விலை குறைவு

ஈரோட்டில் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டிலும், ஸ்டோனி பாலம் அருகேயும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடி, நாகை, கடலூர், ராமேசுவரம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கடல் மீன்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். மீன்பிடி தடை காலம் நிறைவடைந்ததையொட்டி ஈரோடு மீன் மார்க்கெட்டிற்கு நேற்று 15 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தன.

இதனால், மீன்கள் விலை குறைந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் மீன்கள் விலை குறைந்ததாலும், மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஈரோட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் ஒரு கிலோவில் வருமாறு:-

வஞ்சிரம்- ரூ.900, கிளி- ரூ.450, வவ்வால்- ரூ.650, விளா- ரூ.450, மஞ்சள் சாரை- ரூ.500, சீலா- ரூ.250, அயிலை- ரூ.250, சங்கரா- ரூ.350, மத்தி- ரூ.200, கொடுவா- ரூ.400, சின்ன இறால்- ரூ.550, பெரிய இறால் ரூ.700, நண்டு- ரூ.350, பாறை-ரூ.450.


Related Tags :
Next Story