அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி
அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது.
வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தங்களது தோட்டத்தில் விளையும் தக்காளிகளை அய்யலூரில் உள்ள தக்காளி ஏல சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்வார்கள். அங்கிருந்து தக்காளிகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வெளிமாநில தக்காளி மற்றும் உள்ளூர் தக்காளிகளின் வரத்து அதிகரித்ததால், அய்யலூர் சந்தையில் தற்போது தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.400 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அதாவது கிலோவுக்கு ரூ.30 வரை விலை கிடைத்தது. ஆனால் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் 15 கிலோ எடை கொண்ட தக்காளி ரூ.220ஆக வீழ்ச்சியடைந்தது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விலைபோனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.