தக்காளி விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது.
ஒட்டன்சத்திரத்தில் தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்துக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அப்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.10 முதல் ரூ.9 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை. மேலும் ஒரு பெட்டிக்கு 4 கிலோ தக்காளி அழுகி விடுவதால் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றனர்.