தக்காளி விலை உயர்வு
அய்யலூர் சந்தையில் தக்காளி விலை ஏறுமுகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி சந்தை
வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தங்களது தோட்டங்களில் விளையும் தக்காளிகளை அய்யலூர் ஏலச்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
தக்காளியின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இங்கு ஏலம் எடுக்கும் வியாபாரிகள், அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தக்காளிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இங்கு தினமும் 5 டன் வரை தக்காளி விற்பனை நடந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகமாக இருந்தது. இதனால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது.
விலை உயர்வு
14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் சாலையோரத்தில் தக்காளிகளை விவசாயிகள் கொட்டி செல்லும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இந்தநிலையில் தற்போது அய்யலூர் ஏலச்சந்தையில் தக்காளி விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ. 100 முதல் ரூ.120 வரை நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளிக்கு என்று எப்போதும் நிலையான விலை கிடைப்பதில்லை. எனவே அய்யலூரில் தக்காளி பதப்படுத்தப்படும் உணவு பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.