பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் கவுன்சிலர்கள் மூலம் வினியோகம்


பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் கவுன்சிலர்கள் மூலம் வினியோகம்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்களை வார்டு கவுன்சிலர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

ரேஷன் கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்களை வார்டு கவுன்சிலர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் விழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரொக்க பணம் ரூ.1000 ஆகியவை உள்ளிடக்கிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 9-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த ரேஷன்கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

நேற்று முன்தினம் முதல் வீடுகள் தோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான ரேஷன் கடையில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் பல பகுதிகளில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

பணியாளர்கள் பற்றாக்குறை

அதன்படி காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு மக்களுக்கு கடந்த 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இங்குள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் தானாகவே முன்வந்து தனது வார்டு மக்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்களை வினியோகம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து காரைக்குடி 29-வது வார்டு கவுன்சிலர் அமுதாசண்முகம் கூறியதாவது:- எனது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கடை மூலம் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் 8-ந் தேதி வரை வினியோகம் செய்யப்பட உள்ளது.

டோக்கன் வினியோகம்

தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் போதிய ஊழியர்கள் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு டோக்கன்களை விரைந்து வினியோகம் செய்வதில் சுணக்கம் ஏற்படும் நிலை உள்ளதால் கவுன்சிலர்கள் தாமாகவே முன்வந்து மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வினியோகம் செய்து வருகிறோம்.

இதன் மூலம் வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு ஏதாவது விடுப்பட்டுள்ளதா எனவும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மீண்டும் வழங்குவதற்கு உதவியாக உள்ளது என்றார்.


Next Story