வால்பாறையில் இன்று கோடை விழா


வால்பாறையில் இன்று கோடை விழா
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:26 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் இன்று கோடை விழா தொடங்குகிறது

கோயம்புத்தூர்

வால்பாறை: வால்பாறையில் கோடை விழா இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ெதாடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைக்கிறார்.

வால்பாறை கோடைவிழா

வால்பாறை கோடை விழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 27, 28-ந்தேதி வரை ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைக்கிறார். இதில் சப்-கலெக்டர் பிரியங்கா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இதனையொட்டி வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பொறுப்பு வெங்கடாசலம், தி.மு.க. நகர கழக செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலையில் கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அதன்படி கோடை விழா நடைபெறும் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோடை விழாவின் நுழைவு வாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. ஊட்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜெர்பரா, ரோஜா, டென்ரோபியம், புளு டெய்சி, ஏஸ்பரகஸ், பல வண்ண கார்னேசன் உள்பட 6,500 மலர்களால் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் செல்பி ஸ்பார்ட், வண்ணத்துப்பூச்சி, மிக்கி மவுஸ் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் 250 காய்கறிகள் மூலம் வரையாடு, கோடைவிழா சின்னமாக விளங்கும் இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு ஆகியவைகளின் உருவங்களும் செய்யப்பட்டுள்ளது.

படகு சவாரி-தாவரவியல் பூங்கா

பள்ளி மைதானத்தில் பாராகிளைடர் மூலம் பறக்கும் வசதி, வனத்துறையின் சார்பில் இயற்கை பொருட்களை கொண்ட அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் பரத நாட்டியம், யோகா நடனம், கரகாட்டம், காவடியாட்டம், படுகர் இன நடனம், முருகன்-வள்ளி கும்மி பாட்டு, துடும்பாட்டம், பழங்குடியினர் நடன வாத்தியம், காவல்துறையினரின் நாய்கள் சாகச நிகழ்ச்சி, நாய்கள் கண்காட்சி, டீத்தூள் தயாரிப்பு போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. கோடை விழாவை முன்னிட்டு நகராட்சி படகு இல்லம் திறக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கோடைவிழாவின் நிறைவு நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.


Next Story