மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!


மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
x

தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது. இன்று(வியாழக்கிழமை) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 1 நாள் மட்டும் பெரிய கோவில் வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது.

இந்த ஆண்டு சதய விழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி சதய விழா நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது.

சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story