மக்களுக்கும், நாட்டுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்
மக்களுக்கும், நாட்டுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று பயிற்சி முடித்த காவலர்களுக்கு கூடுதல் ஆணையர் காமினி அறிவுரை கூறினார்.
விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 199 பயிற்சி காவலர்களுக்கு கடந்த 14.3.2022 முதல் அடிப்படை பயிற்சி தொடங்கப்பட்டது. இவர்களுக்கு கவாத்து பயிற்சி, சட்டம்- ஒழுங்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சி பெற்ற அனைத்து பயிற்சி காவலர்களும் இறுதித்தேர்வில் 85 சதவீதத்துக்கும் மேலாக மதிப்பெண்கள் பெற்றதுடன் காவல் மண்டலத்தில் நடைபெற்ற பயிற்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் கையுந்து பந்து போட்டியில் முதல் பரிசு பெற்றனர். இவர்கள் கடந்த 7 மாதமாக பயிற்சி பெற்று வந்த நிலையில் இப்பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது.
அணிவகுப்பு மரியாதை
விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாம்பரம் பெருநகர போக்குவரத்து பிரிவு மற்றும் தலைமையக கூடுதல் ஆணையர் காமினி கலந்துகொண்டு பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர்களுக்கு பயிற்சி முடிந்ததற்கான ஆணையையும், பயிற்சியின்போது சிறந்து விளங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பழமையும், பாரம்பரியமும், கட்டுப்பாடும், கடமை உணர்வும் மிக்கது நமது காவல்துறை பணி. தமிழக காவல்துறையில் ஒரு அங்கமாக வாய்ப்பு பெற்றுள்ளீர்கள். இதனை நன்றாக பயன்படுத்தி மக்களுக்கும், நாட்டுக்கும் நல்ல முறையில் நேர்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். நீங்கள் மனிதநேயம், நேர்மை, கடமை உணர்வு கொண்ட சிறந்த காவலர்களாக திகழ வேண்டும்.
நீங்கள், பணியின்போது போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களிடத்தில் மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பார்த்திபன், பிரியதர்ஷினி, முதன்மை சட்ட போதகர் ரேவதி, முதன்மை கவாத்து போதகர் முத்துக்குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு கனகராஜ் நன்றி கூறினார்.