இன்றைய இளைஞர்களிடம்விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?சட்டநிபுணர், பொதுமக்கள் கருத்து


இன்றைய இளைஞர்களிடம்விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?சட்டநிபுணர், பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன் என்பது குறித்து சட்ட நிபுணர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

தேனி

இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.

சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.

சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

எதிர்பார்ப்புகள் அதிகம்

விவாகரத்து வழக்குகள் குறித்து தேனி முன்னாள் அரசு வக்கீல் ராஜராஜேஸ்வரி கூறும்போது,

விவாகரத்து பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. தற்போதைய சூழலில் கணவன், மனைவிக்கு இடையே சரியான புரிதல் இல்லாமலும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகாமல் இருப்பதாலும் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினரிடம் எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக பெண்களிடம் எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருப்பதை காண முடிகிறது. திருமணமான சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். பக்குவப்படாத வயதில் திருமணம் செய்து கொள்ளும் இளம்பெண்களும் திருமணத்துக்கு பிறகு விவாகரத்து பெற முயற்சிக்கின்றனர். காதல் திருமணம் செய்தவர்களும் இதில் விதிவிலக்கு இல்லை.

கூட்டுக்குடும்ப முறை இருந்தவரை ஒவ்வொருவரின் சம்பளமும் குடும்பத்தின் பொதுவில் வைக்கப்படும். அப்போது ஒவ்வொருவரின் செலவுக்கும் சரிசமமாக பங்கிட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். சிறு, சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் பேசித் தீர்க்க வீட்டில் பெரியவர்கள் இருந்தனர். பெரியவர்களின் பேச்சுக்கு இளம்தலைமுறையினரிடம் மதிப்பும், மரியாதையும் இருந்தன. கூட்டுக்குடும்ப முறை சிதைவு பெற்றதால், கணவன், மனைவி இடையே சிறு விரிசல் ஏற்பட்டால் அது நாளுக்கு நாள் பெரிதாகி குடும்ப வன்முறையில் முடிந்து விடுகிறது. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்வதன் மூலம் குடும்ப உறவை மேம்படுத்த முடியும். இதற்கு தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு தர வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ வேண்டும்' என்றார்.

திருமணத்துக்கு முன்பு கவுன்சிலிங்

தேனியை சேர்ந்த உளவியல் நிபுணர் ஜமால்முகைதீன் கூறும்போது, திருமணமான சில மாதங்களில் கணவன், மனைவி இடையே உறவில் விரிசல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, திருமணத்துக்கு முந்தைய காதல் ஏதேனும் இருந்தால் அதை தனது இணையவரிடம் பகிரும் போது அதுவே பிரச்சினையாக உருவாகலாம். தம்பதியரில் யாரேனும் ஒருவருக்கு உடலுறவில் நாட்டமின்மை இருந்தாலும் திருமணமான ஓரிரு மாதங்களில் பிரிவு ஏற்படுகிறது. திருமணத்துக்கு பிறகு மாமனார், மாமியார் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகள், சொத்து பிரச்சினை, அதீத எதிர்பார்ப்புகள் போன்றவையும் பிரிவை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு வரும் பலருக்கு நான் ஆலோசனைகள் வழங்கி வருகிறேன்.

அதேபோல், திருமணத்துக்கு முன்பும் மணமகன், மணமகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தம்பதிகள் தங்களிடையேயும், மாமனார், மாமியாரிடமும் எப்படி நடந்து கொள்வது? மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் எப்படி சரி செய்வது? என்பது தொடர்பாக ஆலோசனைகளை முன்கூட்டியே வழங்க வேண்டும். திருமண வயதை எட்டிய பிறகு திருமணம் செய்து வைப்பது தான் உடல் அளவிலும், மனதளவிலும் அவர்களை தயார்படுத்தும் என்றார்.

கூட்டுக்குடும்ப முறை

ஆதிப்பட்டியை சேர்ந்த சசிகலா-மாரியப்பன் தம்பதியினர் கூறும்போது, கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை என்பதை ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வாழ்க்கை முறை என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. எங்களுக்கு இரு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்கிறோம். இங்கே அனைவரின் செயல்பாடுகளுக்கும், கருத்துகளுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அனைவருக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளது. அத்தை என்று அழைப்பதை விடவும், அம்மா என்று அழைப்பதையே மருமகள்கள் விரும்புகிறார்கள்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையில் நிறைய உரையாடல்கள் இருக்கும். சின்னச்சின்ன மகிழ்ச்சியும் பெரிதாக கொண்டாடப்படும். ஆனால், இன்றைய தலைமுறையினரிடம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை பார்ப்பதே அரிதாகி விட்டது. கணவன், மனைவி இடையே சின்னச்சின்ன கருத்துவேறுபாடுகள் வருவது இயல்பு. ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதல் இருந்தால் கருத்துவேறுபாடுகள் சரியாகி விடும் என்றனர்.

சரியான இணை தேர்வு

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த எழுத்தாளர் தாமோதரன் கூறும்போது, கூட்டுக்குடும்ப முறை சிதைவானதே இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து எண்ணம் அதிகரிக்க முதன்மை காரணம். கட்டுக்கோப்பு இல்லாத வாழ்க்கை முறையை இன்றைக்கு வாழ்கின்றனர். குடும்பங்களில் ஏதாவது ஒரு முடிவு எடுக்கும் போது அதை குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து செய்வார்கள். ஆனால், இன்றைக்கு தம்பதிகள் கூட அமர்ந்து மனம் விட்டு பேசுவது இல்லை. மனம் விட்டு பேசாத வீடுகளில், உறவுக்குள் விரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்க தான் செய்யும். திருமண வயதுக்கு முன்பு திருமணம் செய்வது, சரியான இணையை தேர்வு செய்யாதது போன்றவை திருமண வாழ்வை மணக்கச் செய்யாமல், வெறுக்க வைக்கிறது.

பழைய படி கூட்டுக்குடும்பம் வேரூன்றினால் தான் அது பெரும் விருட்சமாக அமையும். மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்பத்தினரையும் தாண்டி விவாகரத்து என்ற முடிவை எடுப்பார்கள். விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். 'விவாகரத்து' என்ற வார்த்தையை சண்டை போடும்போது மிரட்டுவதற்கான கருவியாக பயன்படுத்த வேண்டாம். நாளடைவில் இந்த வார்த்தைகள் நம் மனதில் ஆழமாக பதிந்து அதனை செய்வதற்கு தூண்டலாம். சின்ன, சின்ன விஷயத்துக்கு எல்லாம் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்கலாம் என்றார்.


Related Tags :
Next Story