நகை திருடிய டெய்லருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை


நகை திருடிய டெய்லருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
x

நகை திருடிய டெய்லருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் மேல ரதவீதியைச் சேர்ந்தவர் கவிதா (வயது 49). இவர் கடந்த 9.12.2013 அன்று களக்காட்டில் உள்ள உறவினரின் திருமண விழாவுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் தனது 12¾ பவுன் நகைகளை கழட்டி மணிப்பர்சில் வைத்திருந்தார். பின்னர் அவர், வள்ளியூரில் டெய்லர் கடை நடத்தி வரும் ஏர்வாடி ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற முருகன் (48) கடைக்கு சென்று துணியை தைக்க கொடுத்தார். அப்போது அவர் மணிப்பர்சை அங்கேயே மறந்து விட்டு சென்றார்.

சிறிதுநேரத்தில் கவிதா நகை இருந்த மணிப்பர்சை டெய்லர் கடையில் மறந்து விட்டு வந்ததை உணர்ந்து திரும்பி சென்றார். அப்போது மணிப்பர்சில் நகைகள் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கவிதாவின் மணிப்பர்சில் இருந்த நகைகளை டெய்லர் பெருமாள் திருடி மறைத்து வைத்தது தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்து நகைகளை மீட்டனர். இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் குற்றம் சாட்டப்பட்ட பெருமாளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story