நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை மிக, மிக குறைவாக இருப்பதால் அறுவடை செய்யப்பட்ட நெல் முழுவதையும் விற்பனை செய்ய முடியவில்லை. அதனால், தனியார் வணிகர்களிடம் மிகக்குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் நெல் ரூ.2,160 வரை வாங்கப்படும் நிலையில், தனியார் வணிகர்கள் ரூ.1,500-க்கும் குறைவாகவே கொள்முதல் செய்கின்றனர்.
நேரடி நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்குவதன் மூலம் அரசுக்கும், உழவர்களுக்கும் நன்மை கிடைக்கும். மேலும் நெல்லுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த அளவு ஆதரவு விலையாக சன்ன ரகத்திற்கு ரூ.2,203, சாதரண ரகத்திற்கு ரூ.2,183 என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன் சாதாரண நெல்லுக்கு ரூ.75-ம், சன்னரக நெல்லுக்கு ரூ.100-ம் ஊக்கத்தொகை மட்டும் வழக்கம் போல வழங்கப்பட்டால் அது உழவர்களுக்கு பயனளிக்காது. மாறாக உழவர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் கொள்முதல் விலை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.