சுகாதார வளாகத்தை திறக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சுகாதார வளாகத்தை திறக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 July 2023 1:30 AM IST (Updated: 18 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் சுகாதார வளாகத்தை திறக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

சுகாதார வளாகம்

கம்பம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் வீடுகளில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் கம்பம்மெட்டு சாலையில் உள்ள நகராட்சி பொது சுகாதார வளாகத்தை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த பொது சுகாதார வளாக கட்டிடம் சேதமடைந்தது. இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுகாதார வளாகம் மூடப்பட்டு, அதன் கட்டிடம் இடிக்கப்பட்டது.

பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அங்கு நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிட பணிகள் முடிவடைந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில், இன்று வரை நவீன சுகாதார வளாகம் திறக்கப்படவில்லை. இதனால் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் தெரு பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். ஆனாலும் அதனை திறக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மறியல்

இந்தநிலையில் அப்பகுதி மக்கள் நேற்று கம்பம்மெட்டு சாலையில் ஏ.கே.ஜி. திடல் முன்பு திரண்டு, நவீன சுகாதார வளாகத்தை திறக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், கட்டிட ஆய்வாளர் சலீம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாக்டர் அம்பேத்கர் தெரு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கம்பம்மெட்டு சாலையில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும். தற்காலிகமாக சுகாதாரமின்றி கிடக்கும் சேனை ஓடையில் உள்ள சுகாதார வளாகத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது பேசிய அதிகாரிகள், சேனை ஓடையில் உள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக சரிசெய்து தரப்படும். நகராட்சியில் ஆணையாளர் பதவி காலியாக உள்ளது. புதிய ஆணையாளர் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நவீன சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் கம்பம்-கூடலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story