வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த கோழிப்பண்ணை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த கோழிப்பண்ணை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த கோழிப்பண்ணை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாட்டுத்துப்பாக்கி
டி.என்.பாளையம் அருகே உள்ள பெரியசென்ட்ராயன் பாளையம் செங்கரடு பகுதியில் பங்களாப்புதூர் போலீசார், டி.என்.பாளையம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். போலீசார், வனத்துறையினரை கண்டதும், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர், 'கே.என்.பாளையம் அம்மன் நகரை சேர்ந்த அய்யப்பன் என்பவருடைய மகன் பூபதி (வயது 23) என்பதும், அவருடைய விவசாய நிலம் வனப்பகுதியைெயாட்டி உள்ளதால், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததும்' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூபதியை கைது செய்ததுடன், அவருடைய வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
இதேபோல் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கொளுஞ்சிக்காடு தோட்டம் பொன்னம்பலம் (44) என்பவருடைய கோழிப்பண்ணையில் வனவிலங்குகளை வேட்டையாட சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து கோழிப்பண்ணைக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர். சோதனையின்போது கோழிப்பண்ணையில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து கோழிப்பண்ணை உரிமையாளரான பொன்னம்பலத்தை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பொன்னம்பலம் கொடுத்த தகவலின் பேரில் 'வன விலங்குகளை வேட்டையாடிவிட்டு, நாட்டுத்துப்பாக்கியை பொன்னம்பலம் கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்ததாக கொங்கர்பாளையத்தை சேர்ந்த கூணன் என்பவருடைய மகன் கருப்புசாமி (26), அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவருடைய மகன் பெரியசாமி (21) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.