குறைந்த விலையில் தக்காளி தருவதாககேரள வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் பறிப்பு
ஓணம் பண்டிகைக்கு குறைந்த விலையில் தக்காளி வாங்கி தருவதாக கூறி கேரள வியாபாரிகளிடம் ரூ.3 லட்சத்தை பறித்துச் சென்ற அண்ணன்- தம்பி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவேங்கடம்:
ஓணம் பண்டிகைக்கு குறைந்த விலையில் தக்காளி வாங்கி தருவதாக கூறி கேரள வியாபாரிகளிடம் ரூ.3 லட்சத்தை பறித்துச் சென்ற அண்ணன்- தம்பி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மளிகைக்கடை
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்துள்ள மேல மாதாபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் சுபு (வயது 26). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள நெடுமாங்காடு பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் அஜி மற்றும் சிரிஜூ ஆகியோா் காய்கறிக்கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் 2 பேரும் சுபுவிடம், "உங்கள் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் ஓணம் பண்டிகைக்காக தக்காளி அதிகமாக தேவைப்படுவதாக கூறி வாங்கித்தருமாறு கேட்டனர்.
சங்கரன்ேகாவிலுக்கு வந்தனர்
இதுபற்றி சுபு தனக்கு தெரிந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் விவரம் கேட்டுள்ளார். அவர், தான் ஓசூர் பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு தக்காளி வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் எனவும் கூறினார்.
இதனை நம்பிய சுபு, அஜி, சிரிஜூ உள்பட 4 பேர் கேரளாவில் இருந்து கார் மூலம் சங்கரன்கோவிலுக்கு கடந்த 24-ந் தேதி வந்தனர். பின்னர் அந்த நபரை செல்போனில் அழைத்தபோது அவர் திருவேங்கடம் பகுதிக்கு வர கூறினார். அங்கு சென்ற அவர்கள் வெகு நேரம் காத்திருந்தனர். பின்னர் அந்த நபர், திருவேங்கடம்- ராஜபாளையம் சாலையில் உள்ள நிச்சேபநதி பாலம் அருகே வருமாறு கூறினார்.
ரூ.3 லட்சம் பறிப்பு
அங்கு சென்றதும் அந்த நபர், பணம் கொண்டு வந்துள்ளீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் கொண்டு வந்துள்ளதாக கூறினர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களுடன் தக்காளி வாங்கி தருவதாக கூறிய நபரும் சேர்ந்து 4 பேரையும் கம்பை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுபற்றி சுபு உள்ளிட்ட 4 வியாபாரிகளும் திருவேங்கடம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் தீவிர விசாரணை நடத்தினார்.
அண்ணன்-தம்பி
விசாரணையில், சங்கரன்கோவில் அருகே உள்ள கோதைநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.