முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இடுக்கி மாவட்டத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்: குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இடுக்கியை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
கலெக்டரிடம் மனு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில், மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள், அணைக்கரைப்பட்டியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள், ஜனாதிபதி மற்றும் தமிழக கவர்னருக்கு அனுப்புவதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களாக இருந்த தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான நீராதாரமான முல்லைப்பெரியாறு அணை, கர்னல் ஜான் பென்னிகுயிக் முயற்சியாலும், தென் மாவட்ட மக்களின் உயிர் தியாகத்தாலும் உருவாக்கப்பட்டது. இந்த அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் கேரள அரசு தடுத்து, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்படுகிறது.
இடுக்கி யூனியன் பிரதேசம்
நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த இடுக்கி மாவட்டம் கேரளாவோடு இணைக்கப்பட்டது. எனவே தமிழக-கேரள மாநில விவசாயிகளின் நலன் கருதி, 50 ஆண்டுகளாக தேசிய நதிநீர் பிரச்சினையாக முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இடுக்கி மாவட்டத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்து மத்திய அரசின் நேரடி பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.
இதன் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் நீராதாரத்தை நம்பியுள்ள மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நீண்டநாள் கனவு நிறைவேறும். எனவே மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து இடுக்கி மாவட்டத்தை இடுக்கி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.