நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி

ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்குபருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு, உதவி கலெக்டர் சத்தீஸ்குமார், தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பேரிடர் நிகழ்வுகள் ஏதும் ஏற்படாத வண்ணம் அனைத்து துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தகவல் தெரிவிக்கலாம்

மேலும், நீர் வழித்தடங்கள், பாலங்கள், கல்வெட்டுகள், கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தி தங்கு தடையின்றி நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் நீர் வழிப்பாதைகளை சுத்தப்படுத்தி அசம்பாவிதம் நிகழா வண்ணம் பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.

அனைத்து துறை சார்ந்த மாவட்ட நிலையிலான அலுவலர்களின் முகவரி, மின்னஞ்சல், செல்போன் எண் ஆகிய விவரங்களை பெற்று தகவல் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் தகவல் தொகுப்பு ஏற்படுத்தி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்ய வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பேரிடர், வெள்ள பாதிப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story