பெரியார் பஸ் நிலையம் அருகே நிறுவுவதற்கு மீன் சிலைகளை மாநகராட்சியிடம் ஒப்படையுங்கள்- ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு


பெரியார் பஸ் நிலையம் அருகே நிறுவுவதற்கு மீன் சிலைகளை மாநகராட்சியிடம் ஒப்படையுங்கள்- ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2023 4:09 AM IST (Updated: 17 Oct 2023 7:31 PM IST)
t-max-icont-min-icon

பெரியார் பஸ்நிலையம் அருகில் நிறுவுவதற்காக மீன் சிலைகளை மாநகராட்சியிடம் ஒப்படையுங்கள் என ரெயில்வே நிர்வாகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


மீன் சிலைகள் அகற்றம்

மதுரை ரெயில் நிலையத்தில் 3 மீன் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. பராமரிப்பு பணிகளுக்காக அந்த மீன் சிலைகள் அகற்றப்பட்டன. மீண்டும் அவற்றை நிறுவக்கோரி தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தீரன்திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின்போது, ரெயில் நிலைய வளாகத்தில் சிலைகள் வைக்கக்கூடாது என்று ரெயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் மீன் சிலையை நிறுவுவது என்றும், இடத்தை தேர்வு செய்யும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மூத்த வக்கீல் ஆர்.காந்தியை நியமித்தும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெரியார் பஸ்நிலையம் அருகில்

அதன்படி மீன் சிலைகள் இதுவரை நிறுவப்படவில்லை என்று தீரன்திருமுருகன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதற்கான குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.காந்தி தனது அறிக்கையை நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்தார்.

அதில், மீன்சிலைகளை நிறுவுவதற்காக மாநகராட்சிக்கு உட்பட்ட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் பெரியார் பஸ் நிலையம் அருகில் புதிய சுற்றுலா பிளாசா வளாகத்தில் பொதுமக்கள் அனைவரும் பார்க்கும்படியான இடத்தில் மீன் சிலைகளை நிறுவுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு அனுமதித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது. சிலைகளை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பராமரிக்க முடிவானது. இதன்மூலம் ஐகோர்ட்டு உத்தரவு முறையாக நிறைவேற்றப்பட்டது என கூறப்பட்டு இருந்தது.

ஒப்படைக்க உத்தரவு

தொழில் வர்த்தக சங்கத்தின் வக்கீல் ஆஜராகி, மீன் சிலைகளை எங்களிடம் ஒப்படைத்தால் சுமார் ரூ.20 லட்சம் செலவில் பெரியார் பஸ் நிலையம் அருகில் மீன் சிலைகளை நிறுவி பராமரிக்க தயாராக உள்ளோம் என்றார்.

முடிவில், மீன் சிலைகளை மதுரை மாநகராட்சியிடம் ரெயில்வே நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி சொல்லும் இடத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தகம் மீன் சிலைகளை நிறுவி பராமரித்து கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story