பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடனுதவி:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடனுதவி:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுவதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பொருளாதார கடன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு கடனுதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் கடன், நுண்கடன், கறவை மாட்டு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு, சுய தொழில் தொடங்க கடன் திட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் தொடங்க கடன் திட்டம், சிறுவிவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம், சிறு குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம் உள்ளிட்ட புதிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தகுதிகள்

இந்த கடன் தொகை பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஓட்டுநர் உரிமம், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து விலைப்புள்ளி மற்றும் திட்ட தொழில் அறிக்கை (ரூ.1 லட்சத்துக்கு மேல்) ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப் படிவத்தை கட்டணமின்றி பெற்று, உரிய சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் தூத்துக்குடி இணைபதிவாளர் (கூட்டுறவுசங்கங்கள்), மத்திய, நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும். கறவைமாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இந்த கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொருளாரதாரத்தை மேம்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.


Next Story