63 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் 63 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை எழுத உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 63 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை எழுத உள்ளனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கிறது.
இந்த தேர்வை தூத்துக்குடியில் 24 ஆயிரத்து 378 பேரும், ஏரலில் 2 ஆயிரத்து 805 பேரும், எட்டயபுரத்தில் 1,953 பேரும், கயத்தாறில் 1,577 பேரும், கோவில்பட்டியில் 13 ஆயிரத்து 644 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 2 ஆயிரத்து 270 பேரும், சாத்தான்குளத்தில் 2 ஆயிரத்து 587 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 ஆயிரத்து 557 பேரும், திருச்செந்தூரில் 7 ஆயிரத்து 319 பேரும், விளாத்திகுளத்தில் 4 ஆயிரத்து 298 பேரும் ஆக மொத்தம் 63 ஆயிரத்து 388 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 223 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பறக்கும் படை
இந்த தேர்வு பணிகளை கண்காணிக்க 41 கண்காணிப்பு குழுக்களும், துணை ஆட்சியர் நிலையில் உள்ள 10 அலுவலர்களும், 18 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளபடி நாளை மறுநாள் காலை 9 மணிக்குள் தேர்வு கூடத்தில் ஆஜராக வேண்டும்.
அதன் பிறகு தேர்வு மையத்துக்கு வருகை தரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், தேர்வுக் கூடத்துக்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.