திண்டுக்கல்லில் குரூப்-2, 2ஏ தேர்வை 1,531 பேர் எழுதினர்; கேள்வித்தாள் பதிவு எண் குளறுபடியால் தாமதம்:
திண்டுக்கல்லில், குரூப்-2, 2ஏ தேர்வை 1,531 பேர் எழுதினர். கேள்வித்தாள் பதிவு எண் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியது.
திண்டுக்கல்லில், குரூப்-2, 2ஏ தேர்வை 1,531 பேர் எழுதினர். கேள்வித்தாள் பதிவு எண் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியது.
குரூப்-2, 2ஏ தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் உள்பட 5 ஆயிரத்து 446 காலி பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 1,638 பேருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி இவர்களுக்கு திண்டுக்கல் பார்வதீஸ் கலை-அறிவியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. காலை, மதியம் என 2 கட்டமாக இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி முதல்கட்ட தேர்வு தொடங்கியது. ஆனால் தேர்வுக்காக கொண்டு வரப்பட்ட கேள்வித்தாள் பதிவு எண் குளறுபடி காரணமாக தேர்வர்களுக்கு கேள்வித்தாள்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2 மணி நேரம் தாமதம்
பின்னர் தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த போது தான், தேர்வு அறைகளுக்கு கேள்வித்தாள்களை ஒதுக்கீடு செய்ததில் குளறுபடி ஏற்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பிரச்சினையை அதிகாரிகள் சரிசெய்து தேர்வர்களுக்கு, கேள்வித்தாள்களை வழங்கினர். இதனால் தேர்வு 2 மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு தொடங்கியது.
மேலும் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டது. இதேபோல் மதியம் 2 மணிக்கு தொடங்க வேண்டிய 2-ம் கட்ட தேர்வு மதியம் 3.15 மணிக்கு தொடங்கி மாலை 6.15 மணி வரை நடந்தது. தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 1,531 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 107 பேர் தேர்வு எழுத வரவில்லை. முன்னதாக கலெக்டர் விசாகன் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.