காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்; மீனவர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடலோரத்தில் அருகே காட்டுப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த துறைமுகத்தின் விரிவாக்கம் பணிக்காக 6 ஆயிரத்து 110 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மதிப்பீடு குழுவிடம் 2018-ம் ஆண்டு விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற இருந்த கருத்துக் கேட்பு கூட்டம் மீனவ சங்கங்களில் எதிர்ப்பு மற்றும் தேர்தல் காலம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கக்கடலில் 2200 ஏக்கர் பரப்பளவில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் மற்றும் நிலப்பரப்பிலும் நிலங்கள் கையகப்படுத்தி காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம் விரிவாக்கம் செய்ய உள்ளது. இது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பழவேற்காடு செல்லும் சாலையில் உள்ள காளாஞ்சி கிராமத்தின் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்போவதாக திருவள்ளூர் மாவட்டம் மீன்பிடி தொழிலாளர்கள் மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் மற்றும் பழவேற்காடு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.