பா.ஜனதா வலையில் விஜயதாரணி சிக்க மாட்டார் - செல்வப்பெருந்தகை
விஜயதாரணிக்கு காங்கிரஸ் கட்சி மீது எந்த அதிருப்தியும் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உடன் இருந்தார்.
அதன்பின்னர் சட்டசபை வளாகத்தில் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. பேரிடர், கொரோனா என பல கட்டங்களை கடந்து பல புதிய திட்டங்களால் தமிழகத்தை உயர்த்தி வருகிறது. இந்த பட்ஜெட் சிறப்பானது. பா.ஜனதாவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள். மத்திய அரசின் வீடு வசதி திட்டம் குளறுபடியானது. இதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.
விஜயதாரணி 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வக்கீல். பா.ஜனதா எப்படி என்றால் பிள்ளை பிடிக்கும் கட்சி. யார், யார் திறமையாக இருக்கிறார்களோ, விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்கலாமா? என்று வலைவீசுவார்கள். அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் விஜயதாரணி சிக்க மாட்டார். அவர் புத்திசாலி.
ஒரு வழக்கு சம்பந்தமாக, டெல்லி போய் இருக்கிறார். உடனே பா.ஜனதா தலைவர்கள் அவரை சேர்த்துக்கொள்ளலாமா? என்று துடிக்கிறார்கள். அது நடக்காது. அவருக்கு (விஜயதாரணி) காங்கிரஸ் கட்சி மீது எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சி அவருக்கு நிறைய செய்துள்ளது. இன்னும் செய்ய தயாராக இருக்கிறது.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.