தமிழக சட்டசபை நாளை கூடுகிறது; கவர்னர் உரையாற்றுகிறார்


தமிழக சட்டசபை நாளை கூடுகிறது; கவர்னர் உரையாற்றுகிறார்
x

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது.

கவர்னர் உரை

காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

சட்டசபைக்கு வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு, அரசு தலைமை கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பின்னர் கவர்னருக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். அதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்வார்.

அதன் பின்னர் அவரை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் சட்டசபை மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். அவர் வரும் வழியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கும். கவர்னர் உள்ளே வந்ததும் சபாநாயகர் இருக்கையில் அமருவார். அவருக்கு அருகே சபாநாயகர் தனி இருக்கையில் உட்காருவார்.

இணையதளத்தில் நேரலை

நாளை காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் பற்றி அவர் உரை நிகழ்த்துவார். சுமார் ஒரு மணிநேரம் கவர்னர் உரை நிகழும்.

அதைத்தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். காகிதம் இல்லாத சட்டசபை என்பதால், அவர்களின் உரைகள், சட்டசபையில் உள்ள தொடுதிரை கம்ப்யூட்டர்களில் திரையிடப்படும்.

கவர்னர் மற்றும் சபாநாயகரின் உரை முழுவதும் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

இரங்கல் தீர்மானம்

பின்னர் சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

மறுநாள் 10-ந் தேதி சட்டசபை கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.யாக இருந்த திருமகன் ஈவெராவின் மரணம் குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும். அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

அதன் பின்னர் 11-ந் தேதி சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதல்-அமைச்சர் பதில் அளிப்பார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவார்.

பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். அவரது பேச்சில் கூறப்படும் கருத்துகளால் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகள்ஏற்பட்டு வருகின்றன. எனவே ஆளும் கட்சியான தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு அரசியல் ரீதியாக பதில் அளித்து வருகின்றன.

அதோடு, சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை உள்ளிட்ட பல மசோதாக்கள் நிலுவையில் இருந்து வருகின்றன. அதுவும் கவர்னர் மீது பல அரசியல் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் சட்டசபையில் கவர்னர் சட்டசபையில் உரை நிகழ்த்துகிறார் என்பதால் அரசியல் ரீதியான பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகளின் கவர்னர் உரை புறக்கணிப்பு நடக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த கூட்டத்தொடரின்போது ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்ப உள்ளன. சட்டம் ஒழுங்கு, கோவை கார் வெடிப்பு, பரந்தூர் விமான நிலையம், விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்த கூட்டத் தொடரில் எழுப்பப்படும்.

அதற்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அமைச்சர் உதயநிதி வருகை

புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அந்தஸ்துடன் முதல்முறையாக சட்டசபைக்குள் நுழைகிறார். எனவே ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் மேஜையை தட்டி ஒலி எழுப்பி அவரை வரவேற்பார்கள். அவருக்கு சட்டசபையில் 10-வது இடம் (அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ரகுபதிக்கு இடையில்) இருக்கை அளிக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் (ஓ.பன்னீர்செல்வம்) இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சபாநாயகரின் குறிப்புரை வழங்கப்பட்டது. அதில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. எனவே இருக்கை மாற்றம் குறித்த வேண்டுகோளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எழுப்ப வாய்ப்பு உள்ளது.

கொரோனா தொற்று தமிழகத்தில் மிகக்குறைவாகவே உள்ளது என்றாலும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவுரையின்படி சட்டசபை கூட்டத்தின்போது அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறை பின்பற்றப்படும். புதிய சட்ட மசோதாக்கள், அரசினர் தீர்மானம் போன்றவை அவையில் வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. கேள்வி நேரமும் இடம் பெறும்.

ஒத்திகை

தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்த்தும் 2-வது உரை இதுவாகும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவருக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பொதுவாக, முன்பு இதுபோன்ற நேரங்களில் கவர்னருக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அரசின் சார்பில் அளிக்கப்பட்டதில்லை.

நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபைக்கு முதல் முறையாக உரை நிகழ்த்த வரும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது.


Next Story