திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா


திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரப்பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது.

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரப்பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது.

ஆசியாவிலேேய மிகப்பெரிய தேர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் நடக்கும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது.

இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரியது. அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் நான்கு இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அடுத்த மாதம் ஆழித்தேரோட்டம்

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பங்குனி உத்திர பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவ கொடியுடன் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர்-தருனேந்தசேகரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் நான்கு வீதிகளிலும் உலா வந்து தியாகராஜர் கோவிலை அடைந்து கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

இதைத்தொடர்ந்து தியாகராஜர் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதன்பின்னர் கொடி மரத்திற்கு சந்தனம், பால், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

கொடியேற்றப்பட்டது

தொடர்ந்து கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேள, தாளங்கள் முழங்க பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் புவனபிாியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான், உள்துறை கட்டளை பரம்பரை அறங்காவலர், நகரசபை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் திருவிழா நடக்கிறது. 16-ந் தேதி(வியாழக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை பக்தோற்சவம் எடியார் கூடும் திருவிழாவும், 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலப்பைரவர் திருவிழாவும், 20-ந் தேதி காட்சி கொடுத்த நாயனார் திருவிழாவும் நடக்கிறது. இதேபோல் தினமும் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சந்திரசேகரரர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் வீதியுலா நடக்கிறது.


Next Story