திருத்தணி-அரக்கோணம் சாலை விரிவாக்க பணிகள் மந்தம்; விரைந்து முடிக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


திருத்தணி-அரக்கோணம் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருத்தணி-அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் வழி என்பதால் 24 மணி நேரமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. இந்நிலையில் அரக்கோணம் நெடுஞ்சாலையை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் அரக்கோணம் சாலையில் விரிவாக்கம் செய்வதற்கு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றி 2 மீட்டர் தார் சாலை, 3 மீட்டர் சிமெண்டு கற்கள் பதித்து சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டன. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு ஜல்லிகள் நிரப்பப்பட்டன. இதன் பின்னர் தார் சாலை போடும் பணிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடங்கப்படாமல் மந்த நிலையில் உள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் சாலையின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களில் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விழுந்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே அரக்கோணம் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story